பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா என்ற தர்மராஜா(40). டிரைவர். இவரது மனைவி அட்சயா(35). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உண்டு. அட்சயா திருச்சி, கோவை நகரங்களில் பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வந்துள்ளார். திருச்சியில் பணிபுரிந்தபோது ஒரு வாலிபருடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை மயில்பாளையம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியேறிய ராஜா – அட்சயா தம்பதிக்குள் நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி நடத்தையின்மீது சந்தேகப்பட்ட ராஜா காய்கறி வெட்டும் கத்தியால் அட்சயாவின் வாய், கன்னம், உதடு, இடது கை ஆகிய இடங்களில் வெட்டி வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு 4 வயது மகனுடன் தப்பினார்.
படுகாயமடைந்த அட்சயா தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொலை முயற்சி வழக்குப் பதிவு ெசய்த பட்டுக்கோட்டை போலீசார், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு நின்றிருந்த ராஜாவை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.அவருடன் இருந்த 4 வயது மகனை போலீசார் பத்திரமாக மீட்டு தஞ்சை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே தர்மராஜா அழுதுகொண்டே பேசிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாவது குறிப்பிடத்தக்கது.
