பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் தலை, கை, கால்கள் இல்லாத ஆண் சடலம் இருந்ததால் பரபரப்ப ஏற்பட்டது. அதனை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக பெரம்பூர் ரயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வடமாநில ரயில்கள் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் வடமாநில பயணிகள் கூட்டம் நிறைந்து, 24 மணி நேரமும் இந்த ரயில் நிலையம் பரபரப்புடன் காணப்படும்.
மேலும், போதை பொருட்களை வடமாநிலங்களில் இருந்து கடத்தி வரும் நபர்கள், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸ் கெடுபிடிக்கு பயந்து, பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கைமாற்றி விட்டு செல்வது வழக்கம். போலீசாரும் அவ்வப்போது பெரம்பூர் ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து வட மாநில நபர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் ஆண் சடலம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் நேற்று காலை கேட்பாரற்ற நிலையில் கிடந்த நீல நிற சூட்கேசில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக பயணிகள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், பெரம்பூர் ரயில்வே காவல் நிலைய போலீசார் 4வது நடைமடையில் கிடந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது, தலை, கை, கால்கள் இல்லாமல் நிர்வாண நிலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதனைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார், உதவி கமிஷனர் ரமேஷ்பாபு ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து பெரம்பூர் ரயில்வே காவல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலை இல்லாத உடலை சூட்கேசில் அடைத்து கொண்டு வந்து ரயில் நிலையத்தில் வைத்து சென்ற நபர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி சம்பவ இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சூட்கேசை கொண்டு வந்த நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பட்டபகலில், பரபரப்பாக இயங்கும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
* தொடரும் கொலைகள்
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது பெரம்பூரில் ஆண் சடலம் சூட்கேசில் மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சிறுமி பலாத்கார சம்பவம் திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் பெண்கள் பாலியல் சீண்டலில் சிக்கிய சம்பவம் மற்றும் தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில் இரட்டை கொலை மீஞ்சூர் பகுதியில் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு கொலைகள் என தொடர்ந்து நடைபெறும் குற்ற சம்பவங்கள் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
* சிசிடிவி கேமரா இல்லை
எப்போதும் பரபரப்பாக இருக்கும் பெரம்பூர் ரயில் நிலையம் உள்ளே பெரும்பாலான இடங்களில் போதிய அளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் யார் சூட்கேசை கொண்டு வந்து வைத்தார் என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் வெளியே உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
குறிப்பிட்ட அந்த சூட்கேஸ் கொண்டுவரும் நபரை அடையாளம் காண முடியுமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை ரயில்களில் வந்து இறங்கி சூட்கேஸை அவர் வைத்திருந்தால் ஒவ்வொரு ரயிலில் முன்பும் உள்ள சிசிடிவியில் அந்த காட்சிகள் பதிவாகி இருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர் ஆனால் ரயிலில் நடு பகுதி போன்ற இடங்களில் குறிப்பிட்ட அந்த நபர் இறங்கி சூட்கேஸை வைத்துவிட்டு சென்றிருந்தால் அதனை கண்டுபிடிப்பதில் இழுபறி ஏற்படலாம் என கூறப்படுகிறது.
