வீடுகள், கடைகளில் சேரும் குப்பைகள் தரம்பிரித்து தராவிட்டால் நடவடிக்கை

 

கரூர், ஜூன் 2: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள் சேரும் திடக்கழிவுகள் தாங்களே பிரித்துக் கொடுக்க கொடுக்க வேண்டும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் கே எம் சுதா எச்சரித்துள்ளார். இதுகுறித்து கரூர் மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இவற்றில் உள்ள 81118 குடியிருப்புகள், 12521 வணிக நிறுவனங்கள் மற்றும் 1000ற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் அனைவரும் மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 -601 படி 01.04.2026 கடைபிடிக்க வேண்டும்.

மாநகராட்சியில் உள்ள 81118 குடியிருப்புகள், 12521 வணிக நிறுவனங்கள் மற்றும் 1000ற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் அனைவரும் தாங்கள் உற்பத்தி செய்யும் திடக்கழிவுகளுக்கு தாங்களே பொறுப்பாளராகும். எனவே திடக்கழிவுகளை நான்கு விதமாக பிரித்து வீடு தோறும் வரும் தூய்மை பணியாளர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். அதன்படி திடக்கழிவுகளை சேகரிக்கவரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் பச்சை நிற கூடையில் சமையலறை கழிவுகள் பழம் காய்கறி, உணவுக்கழிவுகள், பூக்கள் என ஈரக் கழிவுகளை வழங்க வேண்டும்.

நீல நிற கூடையில் காகிதம், அட்டை நெகிழி கழிவுகள் செய்தித்தாள்கள், பால் கவர்கள் கிழிந்த ஆடைகள் உடைந்த பிளாஸ்டிக்பொருட்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும். சிவப்பு நிற கூடையில் மாதவிடாய் துணி கழிவுகள் கையுறைகள், நோயாளிகள் பயன்படுத்திய துணி வகைகளை வழங்க வேண்டும். டைப்பர்கள், மாஸ்க்குகள் கருப்பு நிற கூடையிலும் மின்னணு சாதன கழிவுகள், பேட்டரிகள், மின்விளக்குகள், உடைந்த கண்ணாடிகள் பெயிண்ட் டப்பாக்கள், மருந்துகள் என இவற்றை பொதுமக்கள் பிரித்து வழங்க வேண்டும்.

அதற்கென இந்த கழிவுகளை பெற்ற தூய்மை பணியாளர்கள் ஒதுக்கப்பட்ட இடங்களில் சேகரித்து சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்தப்படும். அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேற்படி கழிவுகளை பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்காமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் திடக்கழிவுகளை தெரு ஓரங்களில் தூக்கி எறிவதோ, எரிப்பதோ செய்தால் அதிகபட்ச அபராத தொகை விதிக்கப்படும். எனவே திடக்கழிவுகளை தரம் பிரித்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவும்.

மேற்கூறிய அரசு அறிவிப்பின்படி குடியிருப்பு பகுதி உரிமையாளர்கள் கடை உரிமையாளர்கள் சாலையோர கடை உரிமையாளர்கள் திடக்கழிவு மேலாண்மையை கடைப்பிடித்து மக்கும் குப்பை மக்காத குப்பை, ரசாயனக்கழிவு மற்றும் பிற கழிவு என நான்கு வகைகளில் பிரித்துக் கொடுக்க வேண்டும் அவ்வாறு பிரித்துவழங்கத் தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: