வௌிநாட்டு செல்போன் அழைப்பில் இருந்து மோடிக்கு மசாலா பொரி விற்ற வியாபாரிக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு கோரி போலீசில் புகார்

ஜார்கிராம்: பிரதமர் மோடிக்கு ஜல்முரி வழங்கி புகழ்பெற்ற கடைக்காரருக்கு வெளிநாட்டு எண்களில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, ஜார்கிராம் பகுதியில் உள்ள காலேஜ் மோர் என்ற இடத்தில் பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பு சென்றது. அப்போது, திடீரென வாகனத்தை நிறுத்திய பிரதமர், விக்ரம் ஷா என்பவரது சாலை ஓர ஜல்முரி கடைக்குச் சென்று 10 ரூபாய்க்கு தின்பண்டம் (மசாலா கார பொரி) வாங்கிச் சாப்பிட்டார்.

இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் இதனை அரசியல் நாடகம் என்று விமர்சித்த நிலையில், ‘நான் ஜல்முரி சாப்பிட்டேன், ஆனால் எரிச்சல் அடைந்தது என்னவோ திரிணாமுல் தான்’ என்று பிரதமர் பதிலடி கொடுத்தார். இந்த சம்பவம் நடந்து முடிந்த நிலையில், தற்போது அந்த ஜல்முரி கடைக்காரர் விக்ரம் ஷா தனது குடும்பத்துடன் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘எனது கடைக்கு மோடி வந்து சென்ற புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் வைரலான பிறகு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளின் குறியீடுகளைக் கொண்ட செல்போன் எண்களில் இருந்து மிரட்டல்கள் வருகின்றன. சில அழைப்புகளில் பெங்காலி மற்றும் இந்தி மொழிகளில் பேசி, எனது கடையை குண்டு வைத்து தகர்ப்போம் என்று எச்சரிக்கின்றனர். வீடியோ கால்களில் சிலர் ஆயுதங்களைக் காட்டி மிரட்டுகிறார்கள். அவர்கள் என்னிடம், நீ ஏன் மோடிக்கு ஜல்முரி கொடுத்தாய் என்று கேட்டு மிரட்டுகிறார்கள். இந்த விவகாரம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவரின் கடைக்கு அருகே போலீசாரின் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகள் குறித்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

Related Stories: