பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏரலில் டிப்பர் லாரிகள் 2 நாள் வேலை நிறுத்தம்

ஏரல்,  மார்ச். 3:  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏரல்  மற்றும் சுற்றுவட்டார பகுதி டிப்பர் லாரி உரிமையாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டுள்ளனர். நேற்று 108 டிப்பர் லாரிகள் ஓடாதநிலையில் இன்றும்  ஓடாது என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல், டீசல்  நாளுக்கு நாள் விலை அதிகரித்து கொண்டே செல்வதால் தமிழகமெங்கும் லாரி, மினி  லாரிகள் என வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஏரல் அருகே வாழவல்லானில் கடந்த வாரம்  செங்கல் ஏற்றி செல்லும் மினி லாரிகள் தங்களது எதிர்பை தெரிவித்து 3 நாள்  வாகனங்களை இயக்கவில்லை. இந்நிலையில் ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை  சேர்ந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி பெட்ரோல்,  டீசல் விலை உயர்வுக்கு நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏரல்  மற்றும் சுற்றுவட்டார பகுதி டிப்பர் லாரி உரிமையாளர்களின் சங்கக் கூட்டம்  நேற்று நடந்தது. தலைவர் மருதநாயகம் என்ற மருது தலைமை  வகித்தார். துணைத்தலைவர் கனகராஜ், செயலாளர் வனமுருகன், துணை செயலாளர்  சந்திரன், பொருளாளர்கள் திருமால், இப்ராகிம்  முன்னிலை வகித்தனர். இதில்  டீசல், பெட்ரோல் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வை முன்னிட்டு வாடகை  உயர்த்தப்பட வேண்டும். குவாரியில் எம்.சாண்ட், ஜல்லி மற்றும்  மெட்டிரியல்கள் விலை உயர்த்தப்பட்டால் அதனை ஒரு வாரத்திற்கு முன்பே  அறிவித்திட வேண்டும், குவாரிக்கு செல்லும் வழித்தடம் மிக மோசமாக இருப்பதால்  அதனை சீரமைத்து தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இருநாட்கள் டிப்பர் லாரிகளை வேலை நிறுத்தம் செய்வது என  முடிவேடுக்கப்பட்டது. அதன்படி நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் நேற்று ஓடவில்லை.  இன்றும் இவ்வாகனங்கள் ஓடாது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 கூட்டத்தில் சங்க  ஆலோசகர்கள் ரகுராமன், ரமேஷ், நிர்வாகிகள் ராஜன், பவுசு, சிவாஜி, ஜெகன்,  பிரம்ம இசக்கி, பெரியசாமி, மதிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: