கோவை: போதையில் ஏற்பட்ட தகராறில் சிறுவனை மதுபாட்டில் மற்றும் கல்லால் அடித்து கொன்று சேற்றில் வீசிய மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை இருகூர், நியூ காலனியைச் சேர்ந்தவர் பாரதிராஜா (39). மாநகராட்சி தூய்மை பணியாளர். இவரது மகன் திவிஷ் (13). அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்துள்ளார். கடந்த 15ம் தேதி மதியம் திவிஷ், நண்பர்களுடன் இருகூர் மாசாணியம்மன் கோயில் அருகே கால்வாயில் மீன் பிடிக்க சென்றவர் வீடு திரும்பாததால் பெற்றோர், திவிஷின் நண்பர்களிடம் விசாரித்துள்ளனர். அதற்கு, உறவினர் என்று கூறி ஒருவர் ஸ்கூட்டரில் அவனை ஏற்றி சென்றதாக தெரிவித்தனர். இதனால் பதறிப்போன பாரதிராஜாவும், அவரது மனைவியும் உறவினர்கள் வீடுகளில் தேடி அலைந்தனர்.
எங்கு தேடியும் திவிஷ் கிடைக்காததால், சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கடத்தி சென்ற மர்ம நபர் யார்? என தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை இருகூர் தண்டவாளம் அருகே தரைபாலம் பகுதியில் சேற்றில் திவிஷ் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சிறுவன் மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையை தொடங்கினர். திவிசுடன் மீன் பிடிக்க சென்ற நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுவன் மற்றும் 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர்கள், திவிஷை கொலை செய்ததை ஒப்பு கொண்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சிறுவர்கள் 3 பேரும் நண்பர்கள். சில நாட்களுக்கு முன்பு 3 பேரும் டவுன்ஹால் பகுதிக்கு துணி வாங்க சென்றுள்ளனர். அப்போது திவிசுக்கும், 15 வயது சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி, 15வயது சிறுவன் வீட்டில் தாத்தா வாங்கி வைத்திருந்த மதுவை எடுத்து குடித்துள்ளார். போதை ஏறியதும் அவர், 13 வயது சிறுவனுடன், திவிஷ் வீட்டிற்கு சென்று மீன் பிடிக்க அழைத்து சென்றுள்ளார். இருகூர் தண்டவாளம் அருகே தரைபாலம் பகுதிக்கு சென்றதும் போதையில் இருந்த 15 வயது சிறுவனுக்கும், திவிசுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த 15 வயது சிறுவன், காலி மதுபாட்டிலை எடுத்து திவிஷின் தலையில் தாக்கி உள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே 13 வயது சிறுவன் கல்லை எடுத்து திவிஷின் தலையில் போட்டுள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் உடலை அங்கிருந்த சேற்றில் தள்ளி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். திவிஷின் பெற்றோர் கேட்டபோது மர்ம நபர் கடத்தி சென்றதாக நாடகமாடி உள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து அவர்களை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மாயமான சிறுவன், 2 சிறுவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
