திருச்சி: திருச்சியில் ஐஜி வீடு அருகே நடைபாதை பூங்காவில், திருமணத்துக்கு மறுத்த எம்பிஏ மாணவியை அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தள்ளி கல்லால் தாக்கி கொல்ல முயன்ற காதலன் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 22வயது இளம்பெண் திருச்சியில் உள்ள விடுதியில் தங்கி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். தொலைதூர கல்வியில் எம்பிஏ படித்து வரும் அவர், திருச்சியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தை சேர்ந்த ஜான்பீட்டர் மகன் வியாகுல நவீன்(22). இவர், திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்துள்ளார். திருச்சியில் விடுதியில் தங்கி தில்லைநகரில் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் வியாகுல நவீனும், இளம்பெண்ணும்சொந்த ஊருக்கு செல்லும்போது பஸ்சில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலானது. கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகின்றனர். திருச்சி விடுதியில் தங்கியுள்ளதால் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். வியாகுல நவீன் திருமணம் செய்துகொள்ளலாம் என காதலிடம் வற்புறுத்தி வந்தார். ஆனால் காதலை பெற்றோர் ஏற்கவில்லை எனக்கூறி அவர் திருமணத்துக்கு மறுத்து விட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை பேசவேண்டும் எனக்கூறி காதலியை வியாகுல நவீன் அழைத்துள்ளார். அண்ணா விளையாட்டரங்கம் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நடைபாதை பூங்காவிற்கு வந்த அவரிடம் வியாகுல நவீன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது உடனடியாக திருமணம் செய்யலாம் என வற்புறுத்தினார். அவர் மறுப்பு தெரிவித்ததோடு உன்னிடம் கார், பைக் உள்ளதா? என்றெல்லாம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வியாகுல நவீன், திடீரென காதலியின் துப்பட்டாவை இழுந்து அவரது கழுத்தை இறுக்கினார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த காதலியின் முகம் மற்றும் தலையில் அருகில் கிடந்த கல்லை எடுத்து சரமாரி தாக்கினார். இதனால் இளம்பெண் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். அப்பகுதியினர் ஓடி வந்து வியாகுல நவீனை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் போலீசை வரவழைத்து அவரை ஒப்படைத்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கொடுத்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீசார் வியாகுல நவீன் மீது கொலை முயற்சி, உள்பட 3 பிரிவுகளின் வழக்கு பதிந்து கைது செய்தனர். ஐஜி வீடு அருகே நடந்த இந்த சம்பவத்தால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த மாணவியை காதலன் கொடூரமாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
