அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் 2 பெண்களை எரித்து கொல்ல முயன்ற வழக்கில் முதியவரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே, பாளையம்பட்டியில் உள்ள சர்ச் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜ். இவரது மனைவி சாந்தி (42). தூய்மைப் பணியாளர். இவர்களது மகன் சந்தீப்குமார் (17), மகள் யாழினி (13). பாண்டியராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், சாந்தி தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், பாண்டியராஜின் அக்கா ஸ்ரீதேவி (45) என்பவர் தனது கணவர் இறந்தநிலையில், அவரும் சாந்தி வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சாந்தி, ஸ்ரீதேவி ஆகியோர் வீட்டு திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தனர். பிள்ளைகள் வீட்டிற்குள் தூங்கினர்.
நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வந்த மர்ம நபர் ஒருவர் சாந்தி, தேவி ஆகியோர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பிச் சென்றார். உடலில் தீப்பற்றி எரிந்ததில் இருவரும் அலறினர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 70 சதவீத காயத்துடன் சாந்தி சீரியஸாக உள்ளார். தேவிக்கு உடலில் 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி மணிநகரை சேர்ந்தவர் முத்து (60) என்பவர் இருவரையும் எரித்துக் கொல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று இரவு முத்துவை கைது செய்தனர். விசாரணையில், ‘பாண்டியராஜின் நண்பரான முத்து, கணவர் இறந்த பின் சாந்தியை தன்னுடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த முத்து சம்பவத்தன்று வீட்டிற்கு சென்று இருவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்றது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் மேலும், விசாரித்து வருகின்றனர்.
