கோவில்பட்டி: கோவில்பட்டி பஸ்நிலையத்தில் காதல் விவகாரத்தில் காதலியின் கண்முன் வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காதலியின் தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் சஞ்சய் (18). சென்னையில் சிற்ப கலைஞராக வேலை பார்த்து வந்தார். இவரும், கோவில்பட்டி அடுத்த கெச்சிலாபுரத்தை சேர்ந்த உறவினர் குமார் மகள் கனகலெட்சுமி என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.
இதற்கு கனகலெட்சுமியின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் சென்னை செல்வதற்காக கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். இதையறிந்த குமார் மற்றும் அவரது உறவினர்கள் மாரிமுத்து, சங்கரநாராயணன் ஆகியோர் கனகலெட்சுமியிடம், ‘சஞ்சய், கோவில்பட்டி பஸ்நிலையம் வந்திருப்பதாகவும், அவரை சந்தித்து பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம்’ என்று கூறி அவரை அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து கனகலெட்சுமியும் தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் கோவில்பட்டி பஸ்நிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கு, சஞ்சய் பஸ் ஏறுவதற்காக தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் குமார் மற்றும் அவரது உறவினர்கள் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே அவர்கள், கனகலெட்சுமியின் கண்முன்னே சஞ்சயை கத்தியால் குத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மற்றும் அவரது நண்பர்கள் பஸ்நிலையத்தில் தலைதெறிக்க ஓடினர்.
சஞ்சய்க்கு கழுத்து மற்றும் சில இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. ஆனாலும் அவர், உயிர் பிழைப்பதற்காக பஸ்நிலையத்தில் தப்பியோடினார். இருந்தபோதிலும் குமார் மற்றும் அவரது உறவினர்கள் அவரை விடாமல் துரத்தி சென்றனர். இந்த சம்பவத்தில் குமாருடன் வந்த மாரிமுத்து என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. பஸ்நிலையத்தில் சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர் தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்திக்குத்தில் காயம் அடைந்த சஞ்சய் மற்றும் மாரிமுத்துவை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சஞ்சய், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர், உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர்கள் சங்கரநாராயணன், மாரிமுத்து ஆகியோரை கைது செய்தனர். காதல் விவகாரத்தில் காதலி கண்முன்னே காதலன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
