சென்னை: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை எஸ்.பி.வேலுமணி அணியினர் நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து, அதிமுக கொறடா யார் என்பதை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதிமுக கட்சி இரண்டாக பிரிந்து எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியாகவும் இருக்கின்றனர். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவெகவிற்கு ஆதரவு இல்லை என தெரிவித்த பிறகு எஸ்.பி.வேலுமணி தரப்பு நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். கட்சி கொறடாவின் பேச்சை கேட்காமல் வேலுமணி தரப்பு செயல்பட்டதாக எடப்பாடி குற்றம் சாட்டினார். இந்நிலையில், அதிமுகவின் கொறடாவை நியமிப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி அக்ரி கிருஷ்ணமூர்த்தி தான் கொறடாவாக செயல்படுவார் என்று அறிவித்துள்ளார். ஆனால் எஸ்.பி.வேலுமணி தரப்பு விஜயபாஸ்கர் தான் கட்சியின் கொறடாவாக இருப்பார் என சொல்கின்றனர். இரண்டு தரப்பினரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து மனு அளித்து வருகின்றனர். ‘அதிமுக கொறடா தொடருக்காக இரு அணிகளும் தொடர்ந்து மனு கொடுத்து வருகின்றனர். இரு தரப்பு மனுக்களும் தற்போது ஆய்வில் உள்ளது’ என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பலரும் ஒரு கட்சியின் கொறடாவை நியமிக்க முழு அதிகாரம் அக்கட்சியின் பொதுச்செயலாளரிடம் தான் உள்ளது. எனவே அதிமுகவின் கொறடாவை நியமிக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமியிடம் தான் இருப்பதாக பலர் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர். இது தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சட்டமன்றத்தில் கொறடாவின் முடிவை ஏற்பதில் அதிமுக இடையே சிக்கல் எழுந்தது. அதுதான் தற்போது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து இருக்கின்றது. இரு தரப்பினரும் மாறி மாறி மனுக்களை வழங்கி வரும் நிலையில் சபாநாயகர் இதுகுறித்து என்ன முடிவு எடுப்பார் என்பது தான் அனைவரது எதிர்பார்பாகவும் உள்ளது. கொறடா மட்டுமல்லாமல் சட்டமன்ற கட்சி தலைவர் தேர்விலும் அதிமுக கட்சிக்குள் சலசலப்பு இருந்து வருகின்றது. எனவே கொறடா மற்றும் சட்டமன்ற கட்சி தலைவர் என இரு பதவிகளுக்கும் மனு கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் விரைவில் இறுதி முடிவு எட்டப்படும் என சபாநாயகர் தெரிவித்து இருக்கின்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை, எடப்பாடி பழனிசாமி தரப்பில் எம்எல்ஏக்கள் தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சந்தித்து பேசினர். இதுகுறித்து கேட்டபோது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி யாரை கொறடா என குறிப்பிடுகிறாரோ அவரை தான் கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும். அதை சபாநாயகரிடம் தெளிவாகக் கூறியுள்ளோம் என்று கூறினர். அதனைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் சபாநாயகரை தலைமை செயலகத்தில் நேற்று பிற்பகல் சந்தித்து, ‘அதிமுக கொறடா யார்? என்பதை விரைவில் அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நேற்று கூறும்போது, “அதிமுகவின் கொறடா நியமனம் தொடர்பாக இரு அணிகளும் தொடர்ந்து மனுக்களை அளித்து வருகின்றனர். இரு தரப்பு மனுக்களும் ஆய்வில் உள்ளது. பேரவை விதிகளின்படி முடிவு செய்யப்படும்” என்றார். சபாநாயகர் முடிவுக்காக அதிமுகவில் இரண்டு தரப்பு எம்எல்ஏக்களும் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் ஒரு முடிவை அறிவித்தால்தான், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா அல்லது எம்எல்ஏ பதவியே காலியாகுமா என்பது தெரியவரும்.
