தாமதமாகும் இலாகா ஒதுக்கீடு புதிய நியமன எம்எல்ஏக்கள் யார், யார்?.. புதுச்சேரி அரசியலில் நீடிக்கும் சஸ்பென்ஸ்

 

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் உள்ளிட்ட 2 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில் அவர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்படாமல் இழுபறி நீடிக்கிறது. அதேபோல் புதிய நியமன எம்எல்ஏக்கள் யார், யார்? என்பதை முடிவு செய்வதிலும் தேஜ அணிக்குள் உரசல் நீடிப்பதால், அரசியலில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி 18 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக ரங்கசாமி, அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். மீதமுள்ள 3 அமைச்சர்கள் பதவிக்கு பாஜ, என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதற்கிடையே சட்டசபையில் வரும் 18ம்தேதி புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா நடக்கிறது. இதில் புதிய எம்எல்எக்களுக்கு தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள அன்பழகன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். தொடர்ந்து சபாநாயகர் தேர்தலை நடத்தி வைக்கவுள்ளார். சபாநாயகர் பதவியை பிடிக்க என்ஆர் காங்கிரஸ், பாஜ இடையே போட்டி நிலவுகிறது. என்ஆர் காங்கிரசில் முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து அல்லது முன்னாள் அமைச்சர் திருமுருகன் ஆகியோரில் ஒருவருக்கு அப்பதவியை வழங்க ரங்கசாமி முடிவு செய்துள்ளார். ஆனால் பாஜகவைச் சேர்ந்த ஜிஎன்எஸ் ராஜசேகரனுக்கு அப்பதவியை வழங்க வேண்டுமென பாஜக தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகிறது.

இதேபோல் நியமன எம்எல்ஏக்களாக, சட்டப்பேரவை தேர்தலில் தோற்றவர்களை நியமிக்க பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில் முதல்வர் ரங்கசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிடாத நபர்களுக்கு மட்டுமே அப்பதவியை வழங்க முடிவெடுத்துள்ள ரங்கசாமி, என்ஆர் காங்கிரஸ் சார்பில் 2 பெயர்களை பரிந்துரை செய்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி என்ஆர் காங்கிரசில் லட்சுமி நாராயணனுக்கும், பாஜகவில் பாஸ்கருக்கும் அப்பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. மற்றொருவர் யார்? என்பதில் தொடர்ந்து சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

ஆனால் ஒன்றிய பாஜகவோ வழக்கம்போல் ரங்கசாமியிடம் பிடிகொடுக்காமல் தங்களுக்கான அதிகாரத்தை பெறுவதில் உறுதியாக இருப்பதால் கவர்னர் மூலமாக ஆளும்தரப்புக்கு அடுத்தடுத்த நெருக்கடிகள் கொடுக்கப்படலாம் என தெரிகிறது. இதனால் புதிய அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடும், அமைச்சரவை விரிவாக்கமும் காலதாமதம் ஆகலாம் எனவும் கூறப்படுகின்றன. ஏற்கனவே உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை பாஜக தன்வசமாக்கியிருந்த நிலையில் தற்போது அதை என்ஆர் காங்கிரஸ் கேட்பதாலும் இருகட்சிகளுக்கும் உரசல் ஏற்பட்டு இழுபறி நீடிக்கின்றன.

இதனிடையே 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற முதல்வர் ரங்கசாமி எம்எல்ஏவாக பதவியேற்பதற்கு முன்பே, தனது தட்டாஞ்சாவடி தொகுதி பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Related Stories: