விழுப்புரம்: விழுப்புரம் அதிமுக அலுவலகத்திற்கு எடப்பாடி, சிவி சண்முகம் தரப்பு உரிமை கோரி இருதரப்பும் அங்கு இன்று காலை குவிந்த நிலையில் அசம்பாவிதம் தடுக்க, யாரும் உள்ளே நுழைய முடியாதபடி அக்கட்டிடத்திற்கு போலீசார் பூட்டு போட்டனர். இதையடுத்து போலீசாருடன், சிவி சண்முகம் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்த சி.வி.சண்முகத்தின் கட்சிப் பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அப்பதவிக்கு ஏற்கனவே நகர செயலாளராக இருந்த பசுபதியை நியமித்தும் உத்தரவிட்டார். நேற்று முன்தினம் விழுப்புரத்தில் ஊர்வலமாக வந்தபோது, அதிமுக கட்சி அலுவலகத்திற்குள் அவரை உள்ளே விடாத அளவிற்கு சி.வி.சண்முகம் ஆதரவு நிர்வாகிகள் கட்சி அலுவலகம் முன்பு திரண்டு கோஷமிட்டனர். இதையடுத்து அசம்பாவிதம் தடுக்க அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதனிடையே அதிமுக புதிய மாவட்ட செயலாளரான பசுபதி, நேற்று விழுப்புரம் எஸ்பியிடம் மனு அளித்தார். அதில், கடந்த 13ம்தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரம் மாவட்டம் செயலாளராக இருந்த சி.வி.சண்முகத்தை மாற்றிவிட்டு என்னை மாவட்ட செயலாளராக நியமித்தார். எனவே விழுப்புரம் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு நான் சென்று பணியாற்ற, மாவட்ட கட்சி அலுவலகத்தின் சாவி அங்குள்ள ஒருவரிடம் உள்ளது. அதனை பெற்று என்னிடம் வழங்கவும், கட்சி அலுவலகம் சென்று பணியாற்ற பாதுகாப்பு வழங்கவும் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் பசுபதி தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக அலுவலகத்துக்கு வந்தனர். இதை அறிந்த சிவி சண்முகம் தரப்பினரும் அங்கு திரண்டனர். இதனால் உஷாரான போலீசார் இருதரப்பும் உள்ளே நுழைய முடியாதபடி தாங்கள் எடுத்துவந்த பூட்டினை போட்டு கதவை இழுத்து மூடினர். இதையடுத்து போலீசாரிடம், ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு தலைமையிலான சிவி சண்முகம் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்குவந்த ஏஎஸ்பி ரவீந்திரகுமார் குப்தாவிடம், அதிமுக அலுவலகம் அமைந்துள்ள சாலையான சென்னை- திருச்சி சாலை வழியாக தங்களை அனுமதிக்குமாறும், பேரிகார்டை உடனே அகற்றும்படியும் முறையிட்டனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார், தற்போதை சூழலில் அவ்வழியாக அதிமுகவினர் யாரும் செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கவே, சிவி சண்முகம் தரப்பினர் கலைந்து சென்றனர். அதேவேளையில் எதிர்தரப்பைச் சேர்ந்த பசுபதி மற்றும் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள அதே பகுதியிலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் (200 மீட்டர்) ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். இதனிடையே சிவி சண்முகமும் இன்று பிற்பகலில் அங்கு வரவுள்ளதாக தகவல் வெளியாவதால் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
தற்போது அதிமுக அலுவலகம் அமைந்துள்ள இடமானது, சிவி சண்முகத்தின் பினாமியான சோலை என்பவரின் பெயரில் உள்ளது. மேலும் அந்த கட்டிடத்திற்கான அனைத்து மின்சார கட்டணம் மற்றும் வரிஉள்பட அனைத்தையும் சில வருடங்களாகவே சிவி சண்முகம் தரப்பினர் செலுத்தி வந்துள்ளனர். இதற்கான ஆவணங்களை போலீசாரிடம் சிவி தரப்பினர் சமர்ப்பித்தும், இருதரப்பும் உரிமை கோருவதால், அலுவலகத்தை தற்போது பூட்டியுள்ள போலீசார், பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில் கட்டிடத்திற்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த எம்.சி.சம்பத், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டு சென்றனர்.
அப்பதவிக்கு எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட புதிய செயலாளரான முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன், கட்சியின் மாநகர செயலாளர் சி.கே.எஸ்.கார்த்திகேயன் தலைமையில் நேற்று கட்சி அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு போடப்பட்டிருந்த பூட்டை, அதிமுக தொண்டர்களுடன் சேர்ந்து சுத்தியலால் உடைத்த நிர்வாகிகள், அதிமுக ஆபீசுக்கு புதிய பூட்டை போட்டனர். அப்போது தவெகவுக்கு ஆதரவாக செயல்படும் எம்சி சம்பத்துக்கு, அதிமுக ஆபீசு சாவி வேண்டுமா? என கொந்தளித்தனர். இதுதொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருதரப்பு மோதலை தடுக்க அங்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
