உலகக்கோப்பை வில்வித்தை ரீகர்வ் குழு போட்டியில் இந்திய மகளிருக்கு தங்கம்

 

ஷாங்காய்: சீனாவில் நடந்த உலகக்கோப்பை வில்வித்தை 2ம் நிலை போட்டியில் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கும்கும் மொஹோத் அடங்கிய குழு, ரீகர்வ் குழு இறுதிப் போட்டியில் சீன வீராங்கனைகளை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் உலகக்கோப்பை வில்வித்தை 2ம் நிலை போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ரீகர்வ் குழு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கும்கும் மொஹோத் அடங்கிய குழு, சீன வீராங்கனைகள் குழுவுடன் மோதினர். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் முதல் 4 செட்களுக்கான போட்டி 4-4 என்ற புள்ளிக்கணக்கில் முடிந்தது.

அதன் பின் நடந்த போட்டியில் 28-26 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. மகளிர் தனிநபர் பிரிவு வில்வித்தை அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜீத் கவுர், தென் கொரியாவை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை காங் சேயோங்கிடம் தோல்வியை தழுவினார். நேற்று முன்தினம் ஆடவருக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய வீரர் ஷாகில் ஜாதவ் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அதையும் சேர்த்து இந்த போட்டிகளில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: