டாயிப்: சவுதி புரோ லீக் கால்பந்து போட்டியில் அல் நஸர் அணியின் கேப்டனும், கால்பந்து ஜாம்பவானுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ 100வது கோல் அடித்து சாதனை படைத்தார். சவுதி புரோ லீக் போட்டிகள் சவுதி அரேபியாவின் டாயிப் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நஸர் அணியும், அல் ஷபாப் அணியும் மோதின.
போட்டியின் துவக்கம் முதல் அல் நஸர் அணி வீரர்கள் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்தி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். அந்த அணியின் ஜாவோ ஃபெலிக்ஸ் போட்டியின் 3 மற்றும் 10வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் போட்டு அசத்தினார். அல் ஷபாப் அணியின் யானிக் கராஸ்கோ 30வது நிமிடத்திலும் அலி அல்புலாய்ஹி 80வது நிமிடத்திலும் லோ போட்டனர். அல் நஸர் அணிக்காக அதன் கேப்டன் ரொனால்டோ 75வது நிமிடத்தில் அட்டகாசமாக பந்தை கடத்திச் சென்று கோல் போட்டு கரவொலி பெற்றார்.
சவுதி புரோ லீக் போட்டிகளில் அவர் அடித்த 100வது கோலாக அது அமைந்தது. போட்டியின் கடைசி கட்டத்தில் 90+8வது நிமிடத்தில் அல் நஸர் அணியின் ஜாவோ பெலிக்ஸ், தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கோலாக்கினார். அத்துடன் போட்டி முடிவுக்கு வந்தது. அதனால், 4-2 என்ற கோல் கணக்கில் அல் நஸர் அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணி, 32 போட்டிகளில் 27ல் வென்று 82 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
