சென்னை: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் நேற்று, உர்வில் படேல் ரன் மழை பொழிந்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது.
ஐபிஎல் தொடரின் 53வது போட்டி, சென்னையில் நேற்று, சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையே நடந்தது. டாஸ் வென்ற சென்னை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, லக்னோ அணியின் துவக்க வீரர்களாக ஜோஷ் இங்லீஸ், மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். அன்சுல் கம்போஜ் வீசிய 6வது ஒவரில் மார்ஷ் (10 ரன்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிகோலஸ் பூரன், 1 ரன்னில் நூர் அஹமதுவிடம் வீழ்ந்தார். ஜேமி ஓவர்டன் வீசிய 10வது ஓவரில் ஜோஷ் இங்லீஸ் (33 பந்து, 6 சிக்சர், 10 பவுண்டரி, 85 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ரிஷப் பண்ட் 15, அய்டன் மார்க்ரம் 6, அக்ஷத் ரகுவன்ஷி 18, ஹிம்மத் சிங் 17 ரன்னுடனும், முகம்மது ஷமி ரன் எடுக்காமலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
20 ஓவர் முடிவில் லக்னோ அணி, 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அதையடுத்து, 204 ரன் வெற்றி இலக்குடன் சென்னை அணியின் துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இந்த இணை துவக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சென்னை அணியின் ஸ்கோர் 45 ஆக இருந்தபோது, திக்வேஷ் ரதி வீசிய 4வது ஓவரில் சஞ்சு சாம்சன் (14 பந்து 2 சிக்சர், 3 பவுண்டரி, 28 ரன்) அவுட்டானார். அதன்பின் களமிறங்கிய உர்வில் படேல், லக்னோ பந்து வீச்சை துவம்சம் செய்து 23 பந்துகளில் 8 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசிய நிலையில், ஷாபாஸ் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். பின் வந்தோரும் சிறப்பாக ஆடியதால், 19.2 ஓவரில், 4 பந்துகள் மீதமிருக்கையில், 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்து சென்னை அணி மகத்தான வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணியின் 3வது தொடர் வெற்றி இது. இதையடுத்து, சென்னை அணி, 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ம் இடத்துக்கு உயர்ந்தது. 3 விக்கெட் வீழ்த்திய சிஎஸ்கே வீரர் ஜேமி ஓவர்டன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
