சென்னை, ஏப்.23: திருவிக நகர் அதிமுக வேட்பாளர் பொற்கொடி தொகுதிக்கு சம்பந்தமில்லா ஆட்களை வைத்து வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரியிடம் திமுக வேட்பாளர் புகார் அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சான பட்நாயக்கை சந்தித்த திருவிக நகர் தொகுதி திமுக வேட்பாளர்கள் ரவிச்சந்திரன் புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ‘அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், அக்கட்சியின் உறுப்பினராக இல்லாமலும், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவநராக இருந்தும், அதிமுக சின்னத்தில் போட்டியிடுவது சட்டரீதியான கேள்விகளை எழுப்புகிறது’. மேலும், வெளிநகரங்களில் இருந்து குற்றப் பின்னணி கொண்டவர்களை பெரம்பூர், பாரதி தெருவில் உள்ள டைமண்ட் ராஜா மஹால் உள்ளிட்ட இடங்களில் தங்கவைத்து, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதுடன், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த நபர்கள் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், தனது கணவரின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், தனது 3 வயது குழந்தையுடன் பரிதாபம் உருவாக்கும் வகையில் பிரசாரம் மேற்கொள்வது, பெண் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. தொகுதிக்கு புறம்பான நபர்கள் தொகுதிக்குள் தங்கி இருந்து வாக்காளர்களை மிரட்டி, பணம் வாங்க வற்புறுத்துவதாகவும், இது தேர்தல் ஒழுங்குமுறைகளுக்கு நேர்மாறானது. மேலும், ரூ.10,000 தொகை வழங்கப்படும் எனக்கூறி செக் டோக்கன் வழங்குதல், மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்கிற குலவிளக்கு திட்டம் பெயரில் பிரசாரம் செய்வது ஆகியவை வாக்காளர்களை தவறாக பாதிக்கும் நடவடிக்கைகளாகும். அரசு சொத்துகள் மின்சார பெட்டிகள், தெரு பெயர் பலகைகள், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகளில் அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது. அதேபோல், தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் வெளியூர் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு பணம் விநியோகம் செய்யப்பட்டதாகவும், சில இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பிரச்சாரத்தின் போது காவல் அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது.
இதனால், தொகுதியில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுவதோடு, தேர்தல் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. வெளிநாட்டு நபர்கள் மற்றும் குற்றப்பின்னணி கொண்டவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தேர்தலுக்கு முன் 48 மணி நேரத்திற்குள் அத்தகைய நபர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பணம் மற்றும் பரிசு விநியோகத்தை தடுக்க கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையமும் காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
