ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு திறப்பு

சென்னை, ஏப்.29: சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமான பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. 24.8 ஏக்கர் பரப்பளவில் உருவாகியுள்ள இந்த நவீன முனையத்திற்கு ‘அறிஞர் அண்ணா பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் உள்ள ‘முன்னோடி திட்டங்கள்’ பிரிவின் கீழ், இதன் கட்டுமான பணிகள் தற்போது முழுமையடைந்துள்ளன. மின்சார இணைப்பு மற்றும் வர்ணம் பூசுதல் போன்ற இறுதிப்பணிகள் நடைபெற்று வரும் சூழலில், சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்த முனையம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட உள்ளது.

இந்த முனையத்தின் மொத்த பரப்பளவில் 9 ஏக்கர் பேருந்து நிறுத்தத்திற்காகவும், 18.2 ஏக்கர் அணுகு சாலைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி பகுதிகளில் நிலவும் நெரிசலை குறைக்கும் விதமாக, சுமார் 436 பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட உள்ளன. இதில் அரசு விரைவுப் பேருந்துகள், விழுப்புரம் மற்றும் சேலம் கோட்ட பேருந்துகள், கர்நாடக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் அடங்கும். வேலூர், ஓசூர், பெங்களூரு, திருப்பதி மற்றும் திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பயணிகள் இந்த முனையத்தின் மூலம் பெரிதும் பயனடைவார்கள்.

தேசிய நெடுஞ்சாலை-4 உடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள இந்த முனையம், அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நகருக்குள் நுழையாமல் விரைவாகச் செல்ல வழிவகை செய்கிறது. அத்துடன் சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்துடன் இது இணைக்கப்படுவதால், பயணிகள் நகரின் பிற பகுதிகளிலிருந்து எளிதாக இங்கு வந்து சேர முடியும். தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு முன்னோடித் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் இத்திட்டம், சென்னையின் மேற்குப் பகுதியை ஒரு முக்கியப் போக்குவரத்து மையமாக மாற்றுவதுடன், பயணிகளுக்கு மேம்பட்ட பயண அனுபவத்தையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: