வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நேற்று நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் சட்டை காலரை ஊழியர்கள் வெட்டி அகற்றி கடும் கெடுபிடி செய்ததால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 15 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. 15 தேர்வு மையங்களில் 5,736 மாணவர்கள் நீட் தேர்வை எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தேர்வை 5,551 பேர் எழுதினர்.
185 ஆப்சென்ட் ஆகினர். நீட் தேர்விற்கு சென்ற மாணவ- மாணவிகள் முழு பரிசோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள், நுழைவு சீட்டை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். காலர் வைத்த சட்டை மற்றும் டீ சர்ட் அணிந்து வந்த மாணவ- மாணவர்களின் காலரை வெட்டி அகற்றினர். அதேபோல் வேலூர் சாயிநாதபுரத்தில் உள்ள அரசு நிதியுதவி பள்ளியில் நீட் தேர்வு மையத்தில், திருப்பத்தூர் மாவட்டம் அரசு மாதிரி பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் பள்ளி சீருடையில் தேர்வு எழுத வந்தனர்.
அவர்களை பரிசோதனை செய்த அதிகாரிகள், காலர் மற்றும் பட்டன் வைத்த சட்டை அணிந்திருந்ததால் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மாணவர்களுடன் வந்திருந்த ஆசிரியை, அருகில் இருந்த துணிக்கடைக்கு மாணவர்களை அழைத்து சென்றார். அவ்வழியாக வந்த ஒருவர் மாணவர்களை பைக்கில் ஏற்றிச்சென்று, டி-சர்ட் வாங்கி கொடுத்தார்.
அதை அணிந்து சென்ற பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவனை பரிசோதனை செய்தபோது, வெள்ளி அரைஞாண் கயிறு அணிந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மாணவனை தேர்வு மைய அதிகாரிகள் வெளியே அனுப்பி வைத்தனர். பின்னர், அந்த மாணவன் வெள்ளி அரைஞாண் கயிற்றை அறுத்து பெற்றோரிடம் கொடுத்து விட்டு, தேர்வு எழுத சென்றான்.
