விக்கிரவாண்டி அருகே நடுரோட்டில் பரபரப்பு டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்த வேன்: செங்கல்பட்டை சேர்ந்த 11 பேர் உயிர் தப்பினர்

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே சாலையில் சென்ற வேன், டயர் திடீரென வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த செங்கல்பட்டை சேர்ந்த 11 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை சேர்ந்தவர் கணேசன் (52). இவரது மனைவி காஞ்சனா, கணேசன் தம்பி பெருமாள் (47), அவரது மனைவி வனிதா மற்றும் 2 குடும்பத்தை சேர்ந்த பிரபாகரன், செல்வராணி, யுவபிரியா, மாதேஸ்வரன் உள்ளிட்ட 10 பேர் ஒரு வேனில் மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரி கோயிலில் பரிகாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் காலை சென்றனர்.

வேனை மதுராந்தகம் அருகே புக்கத்துறையை சேர்ந்த டிரைவர் பாலச்சந்தர் ஓட்டிச் சென்றார். கோயிலில் பரிகாரங்களை முடித்துக்கொண்டு மீண்டும் வேனில் மேல்மருவத்தூர் திரும்பி கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து வராக நதி ஆற்றுப்பாலத்தின் மேலே சென்றபோது, வேனின் வலதுபக்க டயர் திடீரென வெடித்துள்ளது. இதனால் வேனில் தீப்பற்றியது. தீ மளமளவென பரவி டீசல் டேங்க்கும் பற்றி எரிந்தது.

டயர் வெடித்ததும் டிரைவர் பாலச்சந்திரன் வேனை உடனடியாக நிறுத்தி, வேனில் இருந்தவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக கீழே இறங்கிவிட்டார். இதைதொடர்ந்து வேன் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மற்றும் விக்கிரவாண்டி தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் விழுப்புரம்-சென்னை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

Related Stories: