சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அனைத்துக் கட்சிகளும் வாக்கு எண்ணிக்கையை எதிர்நோக்கியிருந்த நேரத்தில் தவெக மட்டும் ரிசார்ட் தேடும் பணியில் தீவிரமாகச் செயல்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி முதல் முறையாகத் தேர்தலைச் சந்திக்கிறார். இந்தத் தேர்தலில் அந்தக் கட்சி 233 தொகுதிகளில் நேரடியாகவும், எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளரை ஆதரித்தும் தேர்தலைச் சந்தித்தது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய சில கருத்துக்கணிப்புகள் தவெகவுக்குக் கணிசமான இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவித்தன. அதைத் தவெகவும் அதிதீவிரமாக நம்பத்தொடங்கிவிட்டது. மேலும், தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமையக்கூடும் என்ற கனவில் உள்ளார் விஜய். தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒருவேளை வெற்றி பெற்றால், அவர்களை மற்ற கட்சிகள் விலைக்கு வாங்கிவிடும் என்ற பயத்திலும் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடாகவே, தனது வேட்பாளர்களைப் பாதுகாக்க அதிமுகவின் பாணியைப் பின்பற்றி ரிசார்ட் தேடும் பணியில் தவெக தரப்பு இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக முழு ரிசார்ட்டும் தங்களுக்கு வேண்டும் எனத் தவெக கேட்டுள்ளதாகவும் ஆனால், எந்த ரிசார்ட்டும் முழுமையாக வழங்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார் முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் அது நிராகரிக்கப்பட்டது. அதனால், எடப்பாடி தொகுதியில் தவெக சுயேச்சை வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தவெக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பணம் வாங்கிக்கொண்டு இவ்வாறு செய்ததாக ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெகவினர் குற்றஞ்சாட்டினர். அதன் தொடர்ச்சியாகவே தவெகவின் ரிசார்ட் தேடும் பணியையும் பார்க்கவேண்டுடியுள்ளது. விஜய் தனது கட்சியினர் மீது நம்பிக்கை வைக்காததன் வெளிப்பாடுதான் இந்த ரிசார்ட் தேடும் வேலை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
ஏற்கனவே, விஜய் சில நாள்களுக்கு முன்னர் தவெக சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளார்களுடன் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெற்றி பெற்றதும் நீங்கள் எங்கும் சென்றுவிடாதீர்கள். நேராகப் பனையூர் அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் நான் உங்களுக்காகக் காத்திருப்பேன் என வேட்பாளர்களிடம் விஜய் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
