ஊட்டி: காட்டுத்தீ காரணமாக மூடப்பட்டிருந்த பைக்காரா அருவி இரு வாரங்களுக்கு பின் நேற்று முதல் திறக்கப்பட்டதோடு, சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக நீலகிரி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கிளன்மார்கன், பைக்காரா, பார்சன்ஸ்வேலி வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது. பைக்காரா அருவியை ஒட்டியுள்ள வனங்களில் காட்டுத்தீ ஏற்பட்ட நிலையில் அதனை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
காட்டு தீ காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 19ம் தேதி முதல் ைபக்காரா அருவி மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இயல்பு நிலை திரும்பிய பின் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த சூழலில் பார்சன்ஸ்வேலி, பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத்தீ முழுமையாக அணைக்கப்பட்ட நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் காட்டுத்தீ அபாயம் நீங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி உத்தரவின் பேரில் 14 நாட்களுக்கு பின் நேற்று முதல் பைக்காரா அருவி திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றுலா தலங்களை பார்வையிட்டு ரசித்தனர்.
