விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி மந்தம் எம்பிக்கள் குற்றச்சாட்டு

அவனியாபுரம், பிப்.26: மதுரை விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி மந்தமாக நடப்பதாக, எம்பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை விமான நிலைய வளர்ச்சி பற்றிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் தலைமை தாங்கினார். மதுரை எம்பி வெங்கடேசன், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘விமான நிலைய விரிவாக்கத்திற்காக 610 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில் இழப்பீடு வழங்க நில உரிமையாளர்களுக்கு ரூ.160 கோடி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஆலோசனையும் ஆய்வு மேற்கொண்டதில் 54 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஒரு வருடமாக ரூ.40 கோடி மட்டுமே பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இன்னும் 1199 பேருக்கு 67 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டியுள்ளது. பணம் ஒதுக்கியும் உரியவர்களுக்கு பண கொடுக்காமல் தமிழக அரசு மந்தகதியில் செயல்பட்டு வருகிறது.

நிலம் கையகப்படுத்திய பின்னரே விமான நிலைய விரிவாக்கத்தில் அண்டர் பாஸ் அல்லது விமான நிலைய ஓடுதளத்திற்கு வெளியே சாலை அமைக்க ஆலோசனை மேற்கொள்ளப்படும். நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டும் மிகுந்த காலம் தாழ்த்துவது கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசு மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு முழு முயற்சி மேற்கொள்ளாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.இன்றைய கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் கலந்து கொள்ளாததால் அவர்களிடமிருந்து அதிகப்படியான தகவல்களையும் ஆலோசனைகளையும் பெற முடியவில்லை’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: