கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மோப்ப நாயுடன் போலீசார் சோதனை ேவலூரில் 3வது முறையாக மீண்டும்

வேலூர், ஏப்.29: வேலூரில் 3வது முறையாக மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையொட்டி நேற்று மோப்ப நாயுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், மாவட்ட வழங்கல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம், தமிழ் வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தினமும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலக இ-மெயில் ஐடியில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு வெடிக்கும் என மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

நேற்று காலை மெயிலை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து அதிகாரிகள் எஸ்பி ஆபீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார், மோப்ப நாய் ரீட்டா மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில், வாகனம் நிறுத்தும் இடம் மற்றும் அனைத்து கட்டிடங்களிலும் உள்ள அனைத்து தளங்களிலும் ஒவ்வொரு அறைகளாக சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின் காரணமாக கலெக்டர் அலுவலகமே பரபரப்பாக காணப்பட்டது. ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்திற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டல் விடுக்கப்பட்டவர் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் 3வது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அலுவலக ஊழியர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: