வேலூர், ஏப்.19: சட்டமன்ற தேர்தலையொட்டி வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் 80 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குப்பதிவு நடைபெறும் வரும் 23ம் தேதி பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளி மாவடடங்களில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்கு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சென்னை, ஒசூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெங்களூரு ஆகிய பகுதிகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டுமே சொந்த ஊர்களுக்கு வந்து, பண்டிகையை கொண்டாடிவிட்டு, மீண்டும் வேலை செய்யும் இடங்களுக்கு சென்று விடுவார்கள்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி வரும் 21ம், 22ம் தேதிகளில் 5,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர் போக்குவரத்து மண்டலத்தின் கீழ் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 700க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலையொட்டி, வேலூர்-சென்னை, திருப்பத்தூர்-சென்னை உள்ளிட்ட வழித்தடத்திற்கு 80 சிறப்பு பஸ்கள வரும் 21, 22ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. வாக்களித்து வேலை செல்பவர்களுக்காக மீண்டும் வரும் 24ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
