ஒடுகத்தூர், ஏப்.22: ஒடுகத்தூர் அருகே கிளி பிடிக்க பட்டுப்போன தென்னை மரத்தில் ஏறிய 10 வயது சிறுவன் தவறி கீழே விழுந்து பரிதாபமாக பலியானார். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு நரிக்குறவர் பகுதியை சேர்ந்தவர் சிவரஞ்சினி(33). இவரது கணவர் இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் இருந்தனர். இதில், மூத்த மகன் மாதையன்(10) நேற்று காலை தனது நண்பர்களுடன் வெங்கனப்பாளையம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பிற்கு சென்றுள்ளார். அங்கு பட்டுப்போன தென்னை மரத்தில் இருந்த பொந்திற்குள் கிளி இருப்பதாக நினைத்து சிறுவன் மரத்தில் ஏறி உள்ளார்.
ஆனால் அந்த பொந்தில் கிளி ஏதும் இல்லாததால் அதற்கும் மேலே உள்ள மற்றொரு பொந்திற்கு ஏறி உள்ளார். ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த பட்டுப்போன தென்னை மரம் சிறுவனின் பாரம் தாங்காமல் திடீரென முறிந்து கீழே விழுந்தது. இதில் சிறுவனும் கீழே விழுந்து மயங்கினார். இதனால் செய்வதறியாமல் உடன் வந்த நண்பர்கள் அழுதபடி கத்தி கூச்சலிட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மயங்கிய சிறுவனுக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர்.
ஆனால் உடலில் எந்த ஒரு அசைவுகளும் இல்லாததால் உடனே ஆம்புலன்ஸ் மற்றும் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிறுவனை சோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி விட்டு சென்றுள்ளனர். இதையறிந்த சிறுவனின் தாய் சிவரஞ்சனி சம்பவ இடத்திற்கு வந்து சடலமாக கிடந்த தனது மகனை மடியில் கண்ணீருடன் கட்டியணைத்து கொண்டு கதறி அழுததை பார்த்த அங்கிருந்தவர்களின் கல் நெஞ்சையும் கரையச் செய்தது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
