வேலூர், ஏப்.19: வேலூர் தாலுகா அலுவலகத்தில் 2வது நாளாக போலீசார் மற்றும் ஊர் காவல்படையினர் தபால் வாக்குகளை செலுத்தினர். இந்திய தேர்தல் ஆணையமானது தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தங்களுடைய வாக்குரிமையை செலுத்துவதற்காக தபால் மூலம் வாக்குரிமையை செலுத்தும் வசதியை வழங்கியுள்ளது. அதன்படி தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தென்னக ரயில்வே, தீயணைப்புத்துறை, சிறைத்துறை உள்ளிட்ட 12 துறைகளை சார்ந்த விருப்பமுள்ள பணியாளர்கள் தபால் வாக்குகளை செலுத்துவதற்காக படிவம் 12டியும், வாக்குப்பதிவு தினத்தன்று பணிகளில் ஈடுபடும் காவல்துறையினர் தங்களது தபால் வாக்குகளை செலுத்த படிவம் 12ம் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கியுள்ளனர்.
அதன்படி, போலீசார், ஊர் காவல் படையினர் தபால் வாக்கும் செலுத்தும் பணி நேற்று தொடங்கிய, வரும் 22ம் தேதி நிறைவடைகிறது. வேலூர் மாவட்டத்தில் போலீசார், ஊர் காவல் படையினர், தீயணைப்பு துறையினர், சிறைத்துறை, மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட 12 துறை சேர்ந்தவர்கள் தபால் வாக்குகளை நேற்று முதல் செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து, 2வது நாளான போலீசார், ஊர் காவல் வீரர்கள் வேலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று தபால் வாக்குகளை செலுத்தினர். அதேபோல், 4 தாலுகா அலுவலகங்களில் தபால் வாக்குகள் செலுத்தப்பட்டது. நேற்று பெறப்பட்ட தபால் வாக்குகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
