வேலூர், ஏப்.25: காட்பாடி பகுதியில் மீண்டும் 14 யானைகள் கூட்டம் முகாமிட்டன. அதனை ஆந்திர வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர். தொடர் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழக எல்லையை ஒட்டி ஆந்திர மாநிலத்தின் சித்தூர், பலமநேர், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கவுண்டன்யா வனப்பகுதி யானைகள் சரணாலயமாக உள்ளது. இதனால் இங்குள்ள யானைகள் கூட்டம் அடிக்கடி தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்து அதையொட்டியுள்ள கிராமங்களிலும் நுழைந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன், தென்னை மற்றும் மாந்தோப்பு, வாழைத்தோட்டங்களையும் நாசம் செய்து வருகின்றன.
குறிப்பாக, பேரணாம்பட்டு, குடியாத்தம், காட்பாடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் இந்த யானைகள் கூட்டம் அடிக்கடி நுழைந்து முகாமிடுவதும், தமிழக வனத்துறையினர் அவற்றை விரட்டி அடிப்பதும் தொடர்ந்து வருகிறது. கடந்த மாதமும் 7 யானைகள் கொண்ட கூட்டம் தமிழக எல்லைக்குள் குறிப்பாக பனமடங்கி வனப்பகுதிக்குள் நுழைந்து காட்பாடி, பனமடங்கி, பள்ளத்தூர், வண்டறந்தாங்கல் பகுதிகளில் உலா வந்து மக்களை அச்சுறுத்தி வந்தன. கிராம மக்கள், வனத்துறையினர் இணைந்து பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்து சத்தம் எழுப்பியும் யானைகள் கூட்டத்தை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
இந்நிலையில் ேநற்று முன்தினம் மதியம் 14 யானைகள் கொண்ட கூட்டம் பனமடங்கி வனத்தை ஒட்டிய கிறிஸ்டியான்பேட்டை மலையில் முகாமிட்டன. இவைகள் அங்கிருந்து வண்டறந்தாங்கல், தொண்டான்துளசி கிராமங்களை ஒட்டிய பகுதிகளில் உலவின. மாந்தோப்புக்குள் நுழைந்து மாமரங்களை நாசப்படுத்தின. தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மேளம் அடித்தும், பட்டாசுகள் அடித்து யானைகள் கூட்டத்தை மீண்டும் நேற்று அதிகாலை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். யானைகள் தொடர் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதேநேரத்தில் யானைகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழையாமல் தடுக்கும் வகையில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
