கடம்போடு வாழ்வு கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஆசிரியர் பணியை பெருமையோடு செய்யுங்கள்

நெல்லை, பிப்.25:  மகத்தான ஆசிரியர் பணியை பெருமையோடு செய்யுங்கள் என்று கடம்போடு வாழ்வு செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாங்குநேரி  ரூபி மனோகரன் பேசினார்.  நாங்குநேரி தொகுதியில் உள்ள கடம்போடு வாழ்வு செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி  நடந்தது. கல்லூரித் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். முதல்வர் குமரேசன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் சண்முகராஜ் வரவேற்றார்.  சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபிமனோகரன், நெல்லை எஸ்டிசி கல்லூரி முன்னாள் முதல்வர் ஜாஸ்மின் மதியழகன் சிறப்புரையாற்றினர். இதில் ரூபி மனோகரன் பேசுகையில், ‘‘நாளைய சமுதாயத்தை உருவாக்கும் மகா சக்தி கொண்டவர்கள் ஆசிரிய பெருமக்கள். ஆசிரியர் பணி என்பது, தொழில் அல்ல. முழுக்க முழுக்க சமூக சேவை நிறைந்த ஆசிரியர் பணி மட்டுமே ஆத்ம திருப்தி தரும் மகத்தானது. ஒவ்வொரு மாணவ, மாணவியையும் நல்வழி நடத்தி ஆளாக்குவதன் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்குகின்றனர். நல்ல சமுதாயத்தை அவர்கள் உருவாக்குவதால், அவர்களது பிள்ளைகளும் மிகச் சிறப்பான முறையில் வளர்ந்து, அவர்களுக்கு பெருமை சேர்க்கின்றனர். ஆசிரியர்களின் பிள்ளைகள் என்றுமே உயர்ந்த நிலையில்தான் இருப்பார்கள். இதை, நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம். எனவே மகத்தான ஆசிரியர் பணியை பெருமையோடு செய்யுங்கள்  பிப்ரவரி 27ம் தேதி ராகுல்காந்தி நாங்குநேரிக்கு வருகை தரும் நிகழ்ச்சிகளில் ஆசிரியப் பெருமக்களும் பங்கேற்க வேண்டும்’’ என்றார்.  நிகழ்ச்சியில் செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள், இன்னாள் மாணவர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>