ஊத்தங்கரை, ஏப்.25: ஊத்தங்கரை அருகே, குடிநீர் விநியோகம் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள குருகப்பட்டி, சையது நகர் மற்றும் சிங்காரவேலன் நகர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த 2 மாதங்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடமும், சாலை விரிவாக்கப் பணி அதிகாரிகளிடமும் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த வாரம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய பிடிஓ விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஆனால், அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று மீண்டும் சிங்காரப்பேட்டை பஸ் நிலையம் பகுதியில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை டிஎஸ்பி ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ் (ஊத்தங்கரை), காந்திமதி(சிங்காரப்பேட்டை) தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். திடீர் மறியல் போராட்டத்தால் சிங்காரப்பேட்டை பகுதியில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
