2093 வாக்குச்சாவடிகளுக்கு 7,733 இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கிருஷ்ணகிரி, ஏப்.23: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 2093 வாக்குச்சாவடிகளுக்கு, 7,733 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 2,246 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(23ம் தேதி) நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 லட்சத்து 83 ஆயிரத்து 351 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 85 ஆயிரத்து 524 பெண் வாக்காளர்களும், 266 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 15 லட்சத்து 69 ஆயிரத்து 141 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 6 தொகுதிகளில் மொத்தம் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு 2508 வாக்குச்சீட்டு பதிவு இயந்திரங்கள், 2508 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2717 வாக்காளர் பதிவு சரிபார்க்கும் இயந்திரங்கள் என மொத்தம் 7,733 வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன.

இவை மாவட்டம் முழுவதும் உள்ள 2093 வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள 235 வாக்குச்சாவடிகளுக்கு 73 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2093 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இணையதள வசதி குறைவாக உள்ள 72 வாக்குச்சாவடிகளுக்கும் நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிவிஜில் செயலி மூலம் 90 புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மாவட்டத்தில் காவல்துறையினர், துணை ராணுவத்தினர், ராஜஸ்தான் போலீசார் என மொத்தம் 2,246 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 100 சதவீத வாக்குப்பதிவுக்கு அழைப்பு விடுத்து தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டுள்ளன. மலை கிராம வாக்குச்சாவடிகளுக்கு நிலைய அலுவலர்கள் சிரமமின்றி செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: