புளி கொள்முதலுக்கு குவியும் வியாபாரிகள்

வேப்பனஹள்ளி, ஏப்.21: வேப்பனஹள்ளி பகுதியில் புளி கொள்முதலுக்காக வடமாநில வியாபாரிகள் குவிந்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி மற்றும் சூளகிரி, பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் புளியமரங்கள் பரவலாக உள்ளன. இதனால், இப்பகுதியில் புளி உற்பத்தி பிரதானமாக உள்ளது. இங்கு, உற்பத்தியாகும் புளி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் துவங்கி ஏப்ரல் மாதம் வரையிலும் புளி சீசன் நீடிக்கும். மூன்று மாதங்கள் மரங்களிலிருந்து சேகரிக்கப்படும் புளி பொட்டு நீக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து தரம் வாரியாக பிரிக்கப்பட்டு ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் கிருஷ்ணகிரியில் நடைபெறும் ஏல மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இம்முறை புளி சீசன் துவங்கியபோது கிலோ 30 முதல் 50 ரூபாய் வரையிலும் விற்பனையானது. தற்போது, புளி சீசன் முடிவடையும் நிலையில் விலை அதிகரித்து 40 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகின்றது. இதன் காரணமாக புளி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது, புளி சீசன் முடிவடையவுள்ளதால், கொள்முதல் செய்வதற்காக வட மாநில வியாபாரிகள் வரத்து அதிகரித்துள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: