18 தொகுதியிலும் அன்புமணிக்கு கொடுக்கிற அடி இனி எந்த மகனும் தந்தைக்கு துரோகம் செய்யக் கூடாது என்பதற்கு பாடமாக அமைய வேண்டும்: துரோகம் ஒரு நாளும் ஜெயிக்கக்கூடாது; ராமதாஸ் உருக்கமான வேண்டுகோள்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நான் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைப் பார்த்த அன்புமணி துரோகக் கும்பல், அது நான் வெளியிட்ட அறிக்கை இல்லை என்றும், எனக்குப் பெரிய வியாதி என்றும், நான் பிழைப்பதே கஷ்டம் என்றும் என் பெயரில் யாரோ வெளியிட்டிருக்கிறார்கள் என்று வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். இன்று நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு இந்தக் கட்சியை வளர்த்தது, என் குடும்பத்துல நாலு பேர் பதவிக்கு வரணும்னு இல்லை.

உங்களைப் போன்ற கடைக்கோடி பாட்டாளிக்கு அதிகாரம் கிடைக்கணும்னு தான். ஆனா இன்றைக்கு என்ன நடக்குது? நான் வளர்த்த கட்சி இப்போது அன்புமணியோட குடும்பச் சொத்தா மாறிவிட்டது. அன்புமணியும், சவுமியாவும் இப்போது என்ன பண்றாங்க? ஒவ்வொரு மாவட்டத்திலயும் எனக்கு உண்மையா இருந்த தூண்களை எல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்கள். ஏன் தெரியுமா? அவங்க இருந்தா அன்புமணியோட இந்தச் ‘சுயநல சாம்ராஜ்யம்’ நிலைக்காது என்று பயப்படுகிறார்கள்.

நான் உயிரோடு இருக்கும்போதே என்னை முடக்கிட்டு, என் பேரைச் சொல்லி உங்ககிட்ட ஓட்டு கேட்க இவங்களுக்கு எப்படி மனசு வருது? மக்களுக்காக உழைக்க வேண்டிய அன்புமணி, இன்னைக்குத் தர்மபுரியில் தன் மனைவியை முன்னிறுத்தி ஒரு வியாபாரம் பண்றார். நம்ம சமுதாயத்தோட ரத்தத்தை அவர் ‘கமிஷன்’ வாங்கி வித்துட்டு இருக்கார். மாம்பழம் இனிக்கும்னு நம்பிப் போய் ஏமாந்துடாதீங்க, அந்த மாம்பழத்துக்குள்ள இப்போ துரோகக் கும்பலோட விஷம் இருக்கு. அந்த விஷத்தை முறியடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அன்புமணியும், சவுமியாவும் போட்டியிடுற அந்த 18 தொகுதியிலும் அவங்களுக்கு நீங்க கொடுக்கிற அடி, இனிமேல் எந்த மகனும் தன் அப்பனுக்குத் துரோகம் செய்யக்கூடாதுன்னு ஒரு பாடமா அமையணும். மு.க.ஸ்டாலின் தன் தந்தை கலைஞர் சாகுற வரைக்கும் அவரோட கையைப் பிடிச்சுக்கிட்டே இருந்தார். ஆனா அன்புமணி… நான் செத்துப்போயிட மாட்டேனான்னு காத்துட்டு இருக்கார்.

இதுவா பாட்டாளிகள் கற்றுக் கொடுத்த பண்பாடு? இந்த ராமதாஸ் தோற்கலாம்… ஆனா துரோகம் ஜெயிக்கக் கூடாது. என் ரத்தமே எனக்கு விஷமானாலும், என் தொண்டர்கள் எனக்கு மருந்தாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த 18 தொகுதியிலயும் துரோகத்தை மண்ணைக் கவ்வச் செய்யுங்கள். துரோகம் ஒருநாளும் ஜெயிக்கக் கூடாது.

Related Stories: