தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது இன்று கட்டாயம் வாக்களியுங்கள்: காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டு போடலாம்; மாநிலம் முழுவதும் 1.4 லட்சம் போலீசார் பாதுகாப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் உள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க மாநிலம் முழுவதும் 1.4 லட்சம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியான முடிவெடுத்து வாக்களிக்கும் நாள் இன்று. எனவே, எந்த வேலை இருந்தாலும் மறக்காமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க தவறாதீர்கள். தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதி முடிவடைகிறது.

இதையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அடங்கும். வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடந்த ஒரு மாதமாக சூறாவளி பிரசாரம் செய்தனர். பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து 11 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமிழகத்தில் மொத்தமுள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தலில் பயன்படுத்தும் அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் உள்ளிட்டவைகள் துப்பாக்கி பாதுகாப்புடன் நேற்று மதியம் முதல் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்ற வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து வாக்களிக்க சவுக்கு கட்டைகள், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 85 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் 300 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் அலுவலர்கள் நேற்று மாலை முதலே வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று மின்னணு வாக்கு எந்திரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டு, தயார் நிலையில் வைத்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி அனைத்து மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் அமைதியான முறையில் தேர்தல் நடத்தும் வகையில் துணை ராணுவ வீரர்களுடன் இணைந்து 1.4 லட்சம் போலீசார் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கும் எண்ணும் மையங்களில் அந்தந்த மாவட்ட காவல்துறை, மாநகர ஆணையர்களுடன் இணைந்து 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இணைப்புடன் சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை சென்னை போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் தலைமையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள 105 காவல் நிலைய எல்லைக்குள் உட்பட்ட பகுதியில் உள்ள லாட்ஜுகள் மற்றும் தங்கும் விடுதிகளில் அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளார்களா என தீவிர சோதனை நடத்தினர். சென்னையில் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் போலீசார் சுழற்சி முறையில் தேர்தல் பணிகளில் ஈடுபட கூடுதல் கமிஷனர் ஒருவர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேரும், பெண்கள் 2 கோடியே 93 லட்சத்து 04 ஆயிரத்து 905 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 728 பேரும் உள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

சட்டமன்ற தேர்தலில் 3,579 ஆண்கள், 443 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் முதன் முதலாக 14,59,039 பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் என மொத்தம் 4,18,541 பேர் தபால் வாக்கு போட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 75,064 வாக்குச்சாவடி மையம் உள்ளது. இங்கு வாக்குப்பதிவுக்காக 1,06,418 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 75,064 விவி-பேட் பயன்படுத்தப்பட உள்ளது.

தேர்தல் பணியில் 3,60,068 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகத்தில் தேர்தல் பணிக்காக 300 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வந்துள்ளது. இதுதவிர 83,875 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 5,949 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அதாவது துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் கூடுதலாக நிறுத்தப்பட்டு, கண்காணிக்கப்படும். வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை நடப்பதற்காக 62 கவுண்டிங் சென்டர் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 15ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற பணம், நகை, பரிசு பொருட்கள் என இதுவரை ரூ.1,262 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பணமாக மட்டும் ரூ.543 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு வகை வாக்குச்சாவடிகள் பல்வேறு பிரிவினரை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 249 மாதிரி வாக்குப்பதிவு மையங்களும், பெண்களே நிர்வகிக்கும் வகையில் 325 மையங்கள், இளைஞர்கள் மட்டுமே பணியாற்றும் வகையில் 79 மையங்கள், மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்கப்படும் 71 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர சில மாவட்டங்களில் பசுமை வாக்காளர் மையம் அமைக்கும் முயற்சி நடக்கிறது. பொதுப் பார்வையாளர்கள் 136, காவல் பார்வையாளர்கள் 40, செலவினப் பார்வையாளர்கள் 150 என மொத்த பார்வையாளர்கள் 326 பேர் உள்ளனர். காவல்துறை ஊழியர்கள் 1,20,000 பேரும், அரசு ஊழியர்கள் 3,40,000 பேரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பான புகார் சி-விஜில் மூலம் 5,634 வந்துள்ளது. இதில் 17 புகார் தவிர மற்ற புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹால் சென்டரில் 74,217 புகார் வந்துள்ளது. அதன்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பணம் வழங்குவதாக புகார் வந்தது.

அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பூத்சிலிப் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 100 சதவீதம் வாக்களிக்க அதிகமான விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும்போது பொதுமக்கள் செல்போன் கொண்டு செல்ல முடியாது. வாக்குப்பதிவு மையங்களில் செல்போனை பாதுகாப்பாக வைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்@ அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து, தயார் நிலையில் உள்ளது. இந்த முறை வரலாற்றிலேயே @இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த வாக்குப்பதிவை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாட்டில் வாக்களிக்க தகுதி உள்ள அனைவரும் மறக்காமல் இன்று கட்டாயம் தங்களது கடமையை ஆற்ற வேண்டும். உங்கள் வாக்குரிமையை நிலைநாட்டுங்கள்.

* வாக்களிப்பது எப்படி? வீடியோ எடுத்தால் 2 ஆண்டுகள் தண்டனை
வாக்குச் சாவடிக்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தால் 1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 128 வாக்குப்பதிவு தொடர்பான ரகசியத்தன்மை கண்டிப்பாக பேணப்படுவதை உறுதி செய்கிறது. வாக்காளர்கள் அல்லது எந்த கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனை மீறினால் பிரிவு 128 இன் கீழ் 2 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்.

* பிரத்யேக கண்காணிப்பு
இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒரு பிரத்யேக கண்காணிப்பு பிரிவை அமைத்துள்ளது. இது சைபர் கிரைம் துறையுடன் இணைந்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றங்களை கண்காணித்து வருவதாக தமிழக தலைமை அதிகாரி கூறினார்.

* 249 மாதிரி வாக்குச்சாவடிகள்
4 விதமான கண்காணிப்பு மையங்கள் கொண்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சமூகவலைதள பதிவை பொருத்தமட்டில் 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,180 இணைய லிங்குகளை முடக்கியுள்ளோம். 249 மாதிரி வாக்குசாவடி மையங்களும், 325 பிங்க் வாக்குசாவடி மையங்கள், 71 வாக்குசாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

* குழந்தைகளை வைத்து ஓட்டு போட சொல்வதா?
குழந்தைகளை வைத்து, அவர்களின் பெற்றோர்களுக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் என்று பிரசாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். குறிப்பிட்டு ஏதாவது புகார் வந்தால் இதுபற்றி தேர்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். வேட்பாளர்கள் பிரசாரத்திற்காக குழந்தைகளை தூண்டிவிடுவதோ அல்லது பயன்படுத்துவதோ தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும். இதுபோன்ற புகார்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி கூறினார்.

Related Stories: