மதுரை: போர் பதற்றம் காரணமாக ஈரானில் சிக்கி தவித்த 283 தமிழ்நாட்டு மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது உறவினர் முகேஷ் (26) மீன்பிடி தொழிலுக்காக ஈரான் சென்றார். இவருடன் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிராமத்தை சேர்ந்த சில மீனவர்கள் அங்கு சென்றனர். ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் காரணமாக இந்திய மீனவர்கள் துறைமுகத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். இவர்கள் அனைவரும் இந்தியா திரும்புவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு வழக்கறிஞர் ராஜாராம் ஆஜராகி, ‘‘650 இந்திய மீனவர்கள் கடந்த 4ம் தேதி ஈரானில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 283 பேர் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள். மீதமுள்ளவர்கள் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘போர் சூழலில் ஈரானில் தவித்த இந்திய மீனவர்களை, பத்திரமாக மீட்டு தாயகம் கொண்டு வந்து சேர்த்த ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது’’ எனக் கூறி மனுவை முடித்து வைத்தனர்.
