கரூர்: கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி) என 3 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இதில் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் திவ்யா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அதிமுகவினர் கரூர் மாவட்டம் புலியூர் பகுதியில் வீடு, வீடாக வாக்காளர்களுக்கு குக்கர் கொடுப்பதாக வந்த தகவலின் பேரில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று புலியூர் பகுதிக்கு சென்றனர்.
அப்போது அங்கு வீடு, வீடாக குக்கர்கள் விநியோகம் செய்தது தெரிய வந்தது. பறக்கும் படையினரை பார்த்த அதிமுகவினர், புலியூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் 52 குக்கரை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர், தனியாருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் கிடந்த 52 குக்கர்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
