நெல்லை, தூத்துக்குடியில் ரூ.1.31 கோடி பறிமுதல்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகதாசம்பட்டி பகுதியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் கோபு தலைமையில் நேற்று அதிகாலை வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சின்னபள்ளத்தூரை சேர்ந்த சதீஷ் என்பவர் டூவீலரில் ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்து 500ஐ உரிய ஆவணமின்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இதேபோல், செட்டியபள்ளி பகுதியில் நடந்த வாகன சோதனையில், பாலக்கோடு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் வந்த வாகனத்தில் உரிய ஆவணமின்றி ரூ.4 லட்சம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நாங்குநேரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மறுகால்குறிச்சி, பட்டர்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் பெரிய பை ஒன்று இருந்தது. அதை திறந்து பார்த்த போது எந்தவித ஆவணங்களும் இன்றி பணம் ரூ.30 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் பட்டர்புரம் பகுதியை சேர்ந்த மாசானம் மகன் முத்துக்கிருஷ்ணன் (48), மறுகால்குறிச்சியை சேர்ந்த ஆறுமுகம் மகன் பரமசிவன் (47) என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து வருமான வரித்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி கணேஷ்நகரில் உள்ள ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்சி அமித்ராஜ் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பறக்கும் படை குழுவினர் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த ரூ.65 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து தென்பாகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக கச்சினாவிளையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை பிடித்து போலீசார், வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாங்குநேரி தொகுதியில் அமமுக வேட்பாளராக இசக்கிமுத்து போட்டியிடுகிறார். பாளை கேடிசி நகர் சீனிவாச நகரில் அமைந்துள்ள அமமுக தேர்தல் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக லட்சக்கணக்கில் பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே, போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அங்கு எவ்வித ஆவணங்களும் இன்றி இருந்த ரூ.20 லட்சத்து 29 ஆயிரத்து 400 ரூபாயை பறிமுதல் செய்த போலீசார் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

* அதிமுக நிர்வாகி கைது
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளாநத்தம் கிராமம் பாறைக்காடு பகுதியில், நேற்று அதிமுக நிர்வாகி ராமசாமி (50) என்பவர், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டு இருந்தார். அவரிடம் இருந்த ரூ.31 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 11 கூப்பன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ராமசாமியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: