ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 73 பேர் கைது திருவண்ணாமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி

திருவண்ணாமலை, பிப்.24: பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் தொடர்ந்து 2வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர்கள் சுமதி, வெண்மதி, தஹஜிம்பானு, திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்தார். ஆனால், இதுவரை செய்யவில்லை. எனவே, உடனடியாக பணி நிரந்தரம் செய்து, வறையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வுபெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ₹10 லட்சமும், உதவியாளருக்கு ₹5 லட்சமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து ஒப்பாரி வைத்து அழுது தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகம் முன் பெண்கள் ஒப்பாரி வைத்து போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 73 அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்து மாலை விடுவிக்கப்பட்டனர்.

Related Stories:

>