அப்பாவி விவசாயி மீது வழக்குப்பதிவு கனிமவள அதிகாரிகள் கண் துடைப்பு நாடகம் பல கோடி மதிப்பு கிரானைட் கடத்திய கும்பலை தப்பவிட்டு

செங்கம், பிப்.24: செங்கம் அருகே கிரானைட் கற்களை கடத்திய கும்பலை தப்பவிட்டு அப்பாவி விவசாயி மீது வழக்குப்பதிவு செய்து கனிம வளத்துறை அதிகாரிகள் கண் துடைப்பு நாடகம் நடத்தியுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மேல்பள்ளிபட்டு கிராமத்தில் விவசாயி கணேசன்(55) என்பவர், அவரது நிலத்தில் இருந்த பாறைகளை அகற்றி சமன் செய்யும் பணியில் ஈடுப்பட்டபோது, கிரானைட் கற்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜேசிபி டிரைவர் கொடுத்த தகவலின்படி ஒரு கும்பல் இரவோடு இரவாக பல கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்களை வெட்டி கடத்தியது.

இந்நிலையில் கிரானைட் கற்களை கடத்திய ஒரு லாரி நேற்று முன்தினம் அதிகாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைப்பார்த்த கிராம மக்கள் கனிம வளத்துறை, போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வராமலும், நடவடிக்கை எடுக்காமலும் அலட்சியம் காட்டிவந்ததாக குற்றம் சாட்டினர். இதுகுறித்த செய்தி நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது.

இந்நிலையில் கனிம வளத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தாமல், அலுவலர் ஒருவரை அனுப்பி விவசாயி கணேசன் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும், அங்கு வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை, கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.இதனால் குற்றவாளிகளை தப்பவிட்டு, அப்பாவி விவசாயி மீது புகார் தெரிவித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கண்துடைப்பு நாடகம் நடத்தி இருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, கிரானைட் கற்களை கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: