ஊட்டி : ஊட்டியில் இம்முறை வெயில் வாட்டி வதைப்பதால் சுற்றுலா தலங்களில் நிழலை தேடி சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை சமவெளி பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கும்.
இச்சமயங்களில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பகுதிகளை சுற்றுலா பயணிகள் முற்றுகையிடுவது வழக்கம். பொதுவாக ஊட்டியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்காது. பிற்பகலுக்கு மேல் வழக்கம் போல் குளிர் வாட்டும்.ஆனால், இம்முறை சமவெளி பகுதிகளை போன்று நீலகிரி மாவட்டத்திலும் வெயில் கொளுத்தி வருகிறது.
இதனால், பகல் நேரங்களில் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். சுற்றுலா தலங்களில் வலம் வரும் சுற்றுலா பயணிகள் தலையில் துணிகளை மூடிக்கொண்டு, குடைகளை பிடித்தப்படியே வலம் வருகின்றனர்.மேலும், வெயிலை பொருட்படுத்த முடியாமல், நிழலைத் தேடி மரங்களுக்கு அடியில் சென்று அமர்ந்து கொள்கின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், குளிர்பானங்கள், மோர்,இளநீர் மற்றும் பழங்களின் விற்பனையும் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மாலை நேரங்களிலே வலம் வருகின்றனர்.
