*ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், மதுபான கடைகளில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதால் தடுக்க அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
காரைக்காலில் சுற்றுச்சூழலுக்கும்,பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.பிளாஸ்டிக் பைகள்,டீ கப்புகள், தெர்மாகோல் தட்டுகள்,குடிநீர் பாக்கெட்டுகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக்பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.அதிகாரிகளின் தொடர்ச்சியான கண்காணிப்பில் பயன்பாடு குறைந்தது.
இதற்கு மாற்றாக வாழை இலை,பாத்திரங்கள்,பீங்கான் பொருட்கள், துணிப்பைகள், சணல் பைகள், காட்டன் காகிதங்கள்,பாக்கு மட்டை தட்டுகள் ஆகியவற்றை பயன்படுத்த அரசு அறிவுறுத்தியது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டினை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு,கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அதன்படி காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள துணிக்கடை, மளிகை கடைகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து வந்தனர்.தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்க தொடங்கிவிட்டது.குறிப்பாக பெரிய ஓட்டல்கள் முதல் கையேந்தி பவன் வரை அனைத்து இடங்களிலும் பார்சல்கள் கட்ட பாலித்தீன் பைகளை தற்போது பயன்படுத்துகின்றனர்.
பொது இடத்தில் விற்க கூடாது என்பதால்,இந்த கவர்கள் டோர் டெலிவரி செய்யப்படுகிறது.மேலும் மொத்த விற்பனை கடைகளிலும் கிடைக்கிறது.பறிமுதல் செய்யப்படும் பாலித்தீன் கவர்களை உள்ளாட்சி நிர்வாகம் என்ன செய்தார்கள் என்பது இது வரை யாருக்கும் தெரியவில்லை.
குறிப்பாக காரைக்கால்,திருநள்ளாறு உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் அவ்வப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வது,விற்பனை செய்யும் கடை கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கை மேற் கொண்டாலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு முற்றிலும் தடுக்கப்படவில்லை.
துணிக்கடை, மளிகை கடை உள்ளிட்ட கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு 90% தடுக்கப்பட்டாலும் ஓட்டல்களிலும், மதுபான கடைகளிலும் பழைய நிலை நீடித்து வருகிறது.இதனால் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் குவிந்து வருகிறது.
முக்கியப் பாதிப்புகளாக காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் மழைநீர் வடிகால்களில் தேங்கி, மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் காரணமாகின்றன.பிளாஸ்டிக் சிதைவடையாத தன்மை கொண்டதால், மண்ணில் ஊடுருவி நிலத்தடி நீர் மட்டம் குறையவும், மண்ணின் தரத்தை அழிக்கவும் செய்கிறது. திறந்தவெளியில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உணவுடன் சேர்த்து உட்கொள்ளும் பசுக்கள் மற்றும் பிற விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டுக் கொடுப்பதும்,உணவு பரிமாறுவதும், அதனை சாப்பிடும் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.குறிப்பாக புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே இதன் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அரசாங்கம் பெயரளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்த கூடாது என்று வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது. அதனை முழு அளவில் ஆய்வு செய்து முற்றிலும் அழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் 100க்கு 90% ஓட்டல்களில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பர்கள் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார்.
