*விரைவில் மூட மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
நெல்லை : மேலப்பாளையம்- அம்பை சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட ராட்ச குழியால் விபத்து அபாயம் நிலவுவதால் இதை முறையாகவும், விரைவிலும் மூட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் காஜா, நெல்லை கலெக்டர் சுகுமாருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
மேலப்பாளையத்தில் அமைந்துள்ள நெல்லை – அம்பை சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இதேபோல் மேலப்பாளையம் சந்தை வாட்டர் டேங் பகுதியானது எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் மிக்கதாகும்.
இதனிடையே தெற்கு பைபாஸ் சாலை முதல் மேலப்பாளையம் சந்தைமுக்கு ரவுண்டானாவரை சாலை வரிவாக்க பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பங்கள் அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டன.
மேலும் தெற்கு புறவழிச்சாலை சந்திப்பு ரவுண்டானா பகுதியில் பெரிய பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து அம்பை சாலையின் இருபுறத்திலும் விரிவாக்கம் பணிக்காக ராட்சத குழிகள் தோண்டப்பட்டு ஜல்லி கற்கள் பரப்பப்பட்டுள்ளன.
இதில் மேலப்பாளையம் வாட்டர் டேங் அருகே சாலை விரிவாக்கம் பணிக்காக ராட்சத குழி தோண்டிய போது பிரதான குடிநீர் குழாயானது சேதமடைந்தது. இதனால் அதில் இருந்து வீணாக வெளியேறிய தண்ணீர் நாட்கணக்கில் தேங்கி நிற்பதால் அப்பகுதி மரணகுளம் போல் காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. அத்துடன் இரவு நேரத்தில் அவ்வழியாக வரும் இரு சக்கர வாகனஓட்டிகள், இந்த குழி இருப்பதை அறியாத நிலையில் அதில் விழுந்து விபத்துக்கு உள்ளாகும் அபாயம் நிலவுகிறது.
எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்துவதோடு இவ்வாறு சாலை விரிவாக்கப்பணிக்காக தோண்டப்பட்ட ராட்சத குழியை விரைந்து முறையாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பாகும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு உடனடியாகத் தீர்வு காண வலியுறுத்தியுள்ளார்.
