தண்டையார்பேட்டை: உரிய ஆவணங்கள் இல்லாததால் சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.18 கோடி தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அதன்படி, உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்படும் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள், தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகிறது. உரிய ஆவணங்கள் இருந்தால் அவற்றை காட்டி, சம்பந்தப்பட்டவர்கள் திரும்ப பெற்று கொள்ளலாம்.
இந்நிலையில் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேசின் பிரிட்ஜ் படவேட்டம்மன் கோயில் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை மடக்கி சோதனை செய்து கொண்டிருந்தனர். அதில், ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது, ரூ.18 கோடி மதிப்புள்ள 12 கிலோ 760 கிராம் தங்கம் இருந்தது. அதுபற்றி அதிகாரிகள் விசாரித்தனர். அதற்கு வாகனத்தில் வந்தவர்கள், ‘பல்லாவரத்தில் இருந்து ஒரு தங்க நகைக்கடையில் இருந்து ராயபுரம் பகுதியில் உள்ள கடையில் நகைகளை கொடுத்து விட்டு வேறு ஒரு கடைக்கு நகைகளை கொண்டு செல்ல எடுத்து செல்கிறோம்’ என்றனர்.
இதையடுத்து, அந்த நகைக்கான ஆவணங்களை கேட்டனர். உடனே அவர்களும் ஆவணங்களை காட்டினர். அந்த ஆவணங்கள், சரி இல்லாததால் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். பின்னர் அவர்கள் வந்ததும், அந்த நகைகள் ஒப்படைக்கப்பட்டன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் தங்க நகைகளை திரும்ப கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
