உடுமலை,ஏப்.18: சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பால் உடுமலை-மூணாறு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு செல்லும் சாலை உள்ளது. அமராவதி நகர் செக்போஸ்டில் இருந்து சின்னாறு வரையிலான தமிழ்நாடு எல்லையின் இருபுறமும் அமராவதி,உடுமலை வனச்சரகங்கள் உள்ளன.
தினசரி ஏராளமான பேருந்துகள், வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. இந்த நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கி உள்ளதால், கேரளாவுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த சுற்றுலா வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. கடந்த இரு நாட்களாக இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
இதனால் உடுமலை-மூணாறு சாலையில் எஸ் பெண்டு பகுதியில் சாலை குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி இந்த இடத்தில் ‘டிராபிக் ஜாம்’ ஆகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே எஸ் பெண்டு பகுதியில் சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
