திருப்பூர், ஏப்.14: திருப்பூரில், மங்கலம் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெருமாள் கோயில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள், சாமி சிலைகளை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மங்கலம், 4 ரோடு அருகே இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற ஆதி கேசவ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தினசரி ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். மங்கலம், வேட்டுவபாளையத்தை சேர்ந்த பூபதி (48) என்பவர் பூசாரியாக உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்றுள்ளார். பின்னர், நேற்று காலை வந்து பார்த்த போது கோயிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது சாமிக்கு அணிவித்திருந்த முக்கால் பவுன் திருமாங்கல்யம், 1 கிலோ வெள்ளி கிரீடம், செம்பு பட்டையம், கிருஷ்ணர் சிலை ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தடய அறிவியல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
