உடுமலை, ஏப்.18: மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று வெஞ்சமடை,சாதிக் நகர், சென்னிமலை பாளையம், ஜிவிஜி கல்லூரி சாலை, எஸ்.வி.புரம், ஜீவாநகர், பிரைட் ஸ்கூல், சாஸ்தா நகர், வாய்க்கால் பாலம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். கிராமங்களில் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.
அப்போது அவர் பேசியதாவது: திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் வழங்கப்பட்டு வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வசதி ஏற்படுத்தப்படும்.முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாகவும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.2,500 ஆகவும், மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும். எனவே, நல்லாட்சி தொடர உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். மடத்துக்குளம் தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார். அவருடன் உடுமலை வடக்கு ஒன்றிய செயலாளர் மெய்ஞானமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி அய்யாவு, திமுக நிர்வாகிகள், மதச்சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.
