திருப்பூர், ஏப். 18: திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் உலகளாவிய வர்த்தக மாதிரி மற்றும் அதன் செயல்பாட்டு நுணுக்கங்களை முன்மாதிரியாகச் செயல்படுத்துவது குறித்து உத்தரப்பிரதேச மாநில சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளர் பிரஞ்சல் யாதவ் ஆலோசனை நடத்தினார். திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதியில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் சங்க நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது, பருத்தியிலிருந்து ஆடை தயாரிப்பு வரை தேவையான அனைத்துக் கட்டமைப்புகளும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது, லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரம் வழங்குவது மற்றும் சாய ஆலை கழிவுநீர் சுத்திகரிப்பில் முன்னோடியாகத் திகழ்வது போன்ற திருப்பூரின் தொழில் பெருமைகள் ஆர்வமாக கேட்டறிந்தார்.
திருப்பூரின் இந்தத் தனித்துவமான தொழில் கட்டமைப்பை ஒரு வெற்றிகரமான முன் மாதிரியாக கொண்டு, பிற மாநிலங்களிலும் ஜவுளி உற்பத்தி மையங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என தொழிற்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணைச்செயலாளர் குமார் துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
