வாலாஜாபாத், ஏப்.18: உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளர், க.சுந்தர் நேற்று வாலாஜாபாத் பேரூர் பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் வாலாஜாபாத் பகுதியில் உயர்தர அரசு மருத்துவமனை, பாலாற்றின் குறுக்கே வாலாஜாபாத் – அவளூர் உயர்மட்ட பாலம், வாலாஜாபாத் பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை, கிராமப்புற பட்டதாரிகள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வாலாஜாபாத் பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளில் முன்னுரிமை, பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா இன்றி இருந்த மக்களுக்கு உடனடி தீர்வாக அரசு பட்டா வழங்கியது உள்ளிட்ட திட்ட பணிகளை திமுக அரசு செய்துள்ளது என்றார்.
மேலும் மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கான விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன், கலைஞர் காப்பீடு, மீனவர்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், ஒன்றிய அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சஞ்சய்காந்தி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுரேஷ்குமார், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சுகுமாரன், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
