சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் 3.04 லட்சம் வாக்குப்பதிவு அலுவலர்கள் தபால் வாக்களிக்க விண்ணப்பம்

காஞ்சிபுரம், ஏப். 16: சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் 3.04 லட்சம் வாக்குப்பதிவு அலுவலர்கள் தபால் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மாநில தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடிகள் அமைப்பது, வீடுவீடாக பூத் சிலிப் விநியோகம், வாக்குப்பதிவு அலுவர்களுக்கு பயிற்சி அளிப்பது, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் வழங்குவது, 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்ற வாக்குப்பதிவு செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் 3.04 லட்சம் வாக்குப்பதிவு அலுவலர்கள் தபால் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு தமிழ்நாடு முழுவதும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் தழுவிய அளவிலான இரண்டாம் கட்ட பயிற்சியானது, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நேற்று நடத்தப்பட்டது. இந்த இரண்டாம் கட்ட பயிற்சி முகாமில், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு அவர்களின் கடமைகள், பணிகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தலைப்புகளிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்த நேரடி பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு அலுவலர்கள் தங்களின் வாக்குகளை தபால் வாக்குச்சீட்டு மூலம் பதிவு செய்வதற்கான வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டது. சுமார் 3.04 லட்சம் வாக்குப்பதிவு அலுவலர்கள் ‘படிவம் 12’ வாயிலாக தபால் வாக்களிப்பிற்காக விண்ணப்பித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற பயிற்சி மையங்களிலேயே அவர்கள் தங்களின் தபால் வாக்குச்சீட்டுகளை பெற்று, அதே இடத்திலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்வதை உறுதிசெய்ய தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தபால் வாக்குப்பதிவிற்கான விதிமுறைகளில் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் காரணமாக, ‘படிவம் 12’ விண்ணப்பத்தின் வாயிலாக தபால் வாக்களிப்பை தேர்வு செய்துள்ள வாக்குப்பதிவு அலுவலர்கள், தற்போது அதற்கென அமைக்கப்பட்ட வாக்களிப்பு மையங்களிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். இது, தேர்தல் பணியாளர்கள் தபால் வாக்குச்சீட்டை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று, பின்னர் தபால் மூலம் அனுப்பி வைக்கும் முந்தைய நடைமுறையில் இருந்து மாறுபட்டதாகும்.

வாக்குப்பதிவு நாளன்று, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீத விவரங்களை புதுப்பிப்பதற்காக, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு உதவும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் தனது ECINET செயலித் தொகுப்பில் ‘PRO Module’ என்ற தொகுதி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த தொகுதியின் செயல்பாடுகள், அறிக்கை அளிக்கும் முறை மற்றும் காலக்கெடு ஆகியவற்றை தெளிவாக புரிந்துகொள்வதற்காக, மாநிலத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பணியாற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மூலம் நேற்று இந்த செயலியின் கள சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: