துவரங்குறிச்சி, ஏப்.16: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த வெங்கட்நாயக்கன்பட்டி குடியிருப்பு பகுதி அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இரை தேடி வந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். நிலை அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறிது நேர போராட்டத்திற்கு பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல துவரங்குறிச்சி திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள முக்கண்பாலம் வனப்பகுதி அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்கு நேற்று காலை சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று இரை தேடி வந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனே துவரங்குறிச்சி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். வன அலுவலர் சரவணகுமார் தலைமையில் வனவர் பெரியசாமி, வனக்காப்பாளர் அய்யனார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள காப்புக்காடு பகுதியில் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
