மணப்பாறை அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமை மீட்பு

மணப்பாறை, ஏப்.11: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நேற்று முன்தினம் இரவு விவசாய கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை நேற்று வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது. மணப்பாறை அடுத்த வடக்கிப்பட்டி முனியப்ப சாமி கோவில் பகுதியில் வசித்து வருபவர் முத்துச்சாமி மகன் விவசாயி விஜயகுமார்(27). நேற்று விடியற்காலை தண்ணீர் பாய்ச்சுவதற்கு விஜயகுமார் சென்றபோது, அங்கு கிணற்றில் காட்டெருமை ஒன்று சுமார் 10 அடி தண்ணீரில் தத்தளித்துள்லது. உடனே இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

மணப்பாறை வனச்சரகர் மகேஸ்வரன் தலைமையிலான துறையினர் சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை செய்துள்ளனர். அதில், புத்தாநத்தம் பீட் கருப்பு ரெட்டியபட்டி காப்புகாடு பகுதியிலிருந்து இரைக்காகவும், தண்ணீருக்காகவும் விளைநிலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்ற காட்டெருமை கூட்டத்தில் வந்த சுமார் 15 வயதுடைய ஆண் காட்டெருமை கிணற்றில் தவறி விழுந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மதுரையில் இருந்து கால்நடை மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு மயக்க மருந்து செலுத்தி, தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றிலிருந்து க்ரைன் மூலம் பெல்ட் கட்டி காட்டெருமை நல்லபடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விடப்பட்டது.

 

Related Stories: